.
மும்பை
மகாராஷ்டிர அரசு மதுக்கடைகள் தவிர மற்ற கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மகராஷ்டிரா சட்டசபையில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனக்கள் விதி முறையின் கீழ் சட்ட திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதற்கு சட்ட மன்ற ஒப்புதல் கிடைத்தை ஒட்டி தற்போது ஆளுனரும் தனது ஒப்புதலை அளித்துள்ளார். அதை ஒட்டி அந்தச் சட்டம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது.
அதன்படி அனைத்துக் கடைகள், ஓட்டல்கள், திரையரங்குகள், தீம் பார்க்குகள், மற்றும் தொழிற்சாலை அல்லாத பல வர்த்தக இடங்களும் 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த அனுமதியில் இருந்து, மதுக் கடைகள், பார்கள், மற்றும் மதுவை வழங்கும் உணவகங்கள் ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. மற்றும் வங்கிகள், மருத்துவ இல்லங்கள், கட்டிட வல்லுனர் அலுவலகங்கள் ஆகியைவைகளுக்கும் இந்த அனுமதி பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
”இந்த சட்ட திருத்தம் கடைகள் மற்றும் நிறுவனங்களை பணி புரிவோரின் எண்ணிக்கையைப் பொருத்து இரு பிரிவாக பிரிக்கப் பட்டுள்ளது. அதன் படி 10 பேருக்கு குறைவாக பணி புரிவோர் உள்ள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வார விடுமுறை மற்றும் பணி நேரத்தை சரியாக ஒதுக்கிட முடிந்தால் மட்டுமே இந்த விதியின் கீழ் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட நிறுவனங்களும் இந்த விவரங்களை அரசுக்கு அளித்து அனுமதி பெற வேண்டும்” என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார்.
”இந்த புதிய சட்டத் திருத்தத்தின் படி பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதை வர்த்தக நிறுவனங்கள் அரசுக்கு உறுதி அளிக்க வேண்டும். இரவு 9.30 மணிக்கு மேல் பெண்கள் பணி புரியும் போது அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் அதிக நேரம் வேலை செய்வதற்கான அதிக ஊதியம் (ஓடி) தர வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை அளிக்க வேண்டும்” என மகாராஷ்டிரா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சம்பாஜி நிலங்கேகர் பாடில் கூறி உள்ளார்.