டில்லி

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தற்போது டில்லியில் முகாமிட்டுள்ளனர்.

 

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகார பகிர்வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது.   இரு கட்சிகளும் தலா இரண்டரை வருடம் முதல்வர் பதவியைப் பகிரவேண்டும் என்னும் சிவசேனாவின் நிபந்தனையை பாஜக ஏற்கவில்லை.  அதனால் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிவசேனா கட்சித் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான சரத் பவாரை சந்தித்து இது குறித்து விவாதித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டவருமான அஜித் பவார் இந்த சந்திப்பு மகாராஷ்டிர மாநில விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க நடந்ததாகத் தெரிவித்தார்.  அதே தகவலை சிவசேனா கட்சியின் நாளேடான சாம்னாவும் தெரிவித்தது.

இந்நிலையில் சரத் பவாரின் பேரனும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினருமான ரோகித் பவார் தனது முகநூலில் சிவசேனா கட்சியின் அமைப்பாளரான பால் தாக்கரேவை வெகுவாக புகழ்ந்துள்ளார்.  அவர் உயிருடன் இருந்திருந்தால் பாஜகவுக்கு சிவசேனாவின் கோரிக்கையை மறுக்கும் அளவுக்குத் தைரியம் வந்திருக்காது என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.   இன்று காலை சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் மகாராஷ்டிர ஆளுநரைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

காலை 10 மணி அளவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் டில்லிக்குக் கிளம்பி வந்துள்ளார்.   அவர் இன்று அமித்ஷாவைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது குறித்து ஃபட்நாவிஸ் தாம் மழையால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை தெரிவிக்க வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.   ஆனால் தற்போதுள்ள அரசியல் நிலைமையில் அவர் மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் உள்ள சிக்கல் குறித்து விவாதிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே வேளையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசின் தலைவி சோனியா காந்தியை இன்று சந்திக்க உளஹ்டாக தகவல்கள் வந்துள்ளன.   இந்த சந்திப்பில் சிவசேனா கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதைக் குறித்து விவாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.  இவ்வாறு மூன்று கட்சிகளின் பிரமுகர்களும் டில்லியில் முகாமிட்டுள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.