மும்பை:
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், 20 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவிக்கையில், ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், மாநிலத்தில் உள்ள 20 ஆயிரத்து 37 தொழிற்சாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மாநிலத்தின் பொருளாதாரத்தை படிப்படியாக அதிகரிக்கவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 27 க்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் பிரிவில் உள்ள 6 ஆயிரத்து 589 தொழிற்சாலைகளுடன், கடந்த ஒரு வாரத்தில் அனுமதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 448 தொழிற்சாலைகளும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் கொரோனா அல்லாத மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்தது. இதுமட்டுமின்றி விதிமுறைகளுக்கு இணங்க 13 ஆயிரத்து 448 தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், சிவப்பு மண்டலத்தில் இருக்கும் மும்பை, தானே, கல்யாண்-டோம்பிவலி, பன்வெல், புனே போன்ற பகுதிகளில் உள்ள நாட்டின் மிகப்பெரிய தொழில்துறைசாலைகள் இயங்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தேசாய் தெளிவுபடுத்தினார்.