மும்பை
மகாராஷ்டிராவில் வெளி மாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு யார் பொறுப்பு என்பதை அரசு வெளியிட உள்ளதாக சிவசேனா கூறி உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாகத் தேசிய ஊரடங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்தார். கடந்த 14 ஆம் தேதி அன்று காலை அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையொட்டி வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது மே 3 வரை மீண்டும் தள்ளிப் போனது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பை பாந்த்ரா பகுதியில் ஏப்ரல் 14 மாலை சுமார் 4 மணிக்கு ஆயிரக்கணக்கான வெளி மாநில ஊழியர்கள் திரண்டு தங்களுக்குச் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யக் கோரி போராட்டம் நடத்தினர். இங்கு பணம், உணவு இன்றி தவிப்பதால் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் இட்டனர்.
காவல்துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த நிகழ்வு குறித்து சிவசேனாவின் அதிகாரப் பூர்வ நாளேடான சாம்னா தனது தலையங்கத்தில், “வெளியூர் செல்லும் ரயில்கள் மும்பை நகரில் புறநகரான பாந்த்ராவில் இருந்து மட்டும் கிளம்புவதில்லை. லோகமான்ய திலக் டெர்மினஸ், மும்பை செண்டிரல் மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் உள்ளிட்ட நகர் பகுதியி இருந்தும் கிளம்புகின்றன.
ஆனால் வெளி மாநில தொழிலாளர்கள் கூட்டம் பாந்த்ராவில் மட்டும் கூடி உள்ளது. டிவி செய்தி சேனல்கள் இதைப் போல் குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் நடந்ததை கண்டு கொள்ளவில்லை. இதை என்னவென்று அழைப்பது? இது ஒரு பெரிய சதி ஆகும். இதை யார் செய்தது என்பதை அரசு வெளிப்படுத்தும்.
மகாராஷ்டிரா அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை செய்ய நடக்கும் முயற்சிகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. எதிர்க்கட்சிகள் அத்தனை கீழ்த்தரமாக நடந்துக் கொண்டுள்ளன.
தற்போதுள்ள நிலையில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தினக்கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளன்ர். அந்த ஏழை மக்களுக்கான பல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் மாநில நிர்வாகத்தை நடத்துவது எளிதானதல்ல. நேற்று வரை அரசு வெளி மாநில தொழிலாளர்களை நன்கு கவனித்து வந்த போது இன்று அவர்கள் இங்கிருந்து ஓட விரும்புகின்றனர். இதை மோசடி என்றுதான் கூற வேண்டும். துன்ப நேரத்தில் நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே உண்மையான மண்ணின் மைந்தர்கள்
இந்த நேரத்தில் இங்கிருந்து ஓட நினைப்பவர்கள் மீண்டும் இங்கு வர மாட்டார்கள். பாந்த்ராவில் கூடியவர்கள் பின்புலத்தைக் கண்டறியவேண்டும். அவர்கள் ஊரடங்கு விதி முறையை ,மீறி மாநிலத்துக்கு கேடு விளைவிக்க முயன்றுள்ளனர். காவல்துறையினர் இதுவரை என்ன செய்துள்ளது? சொந்த ஊர் செல்ல வந்தவர்களிடம் எந்த ஒரு லக்கேஜும் இல்லை.
மகாராஷ்டிராவில் நடந்து வரும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் கக்கிரஸ் கூட்டணி அரசுக்குத் தொல்லை கொடுக்க பாஜக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளது. அந்தக் கட்சி இதற்காக எந்த ஒரு அளவுக்கும் கீழிறங்கும் ரயில்கள் மீண்டும் இயங்கும் என்பது வதந்தி அல்ல செய்தியாகும்.
பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிப்பாரா என்பது குறித்து ஒரு தெளிவு இல்லாத நிலையில் ரயில்வே எவ்வாறு ஏப்ரல் 15 முதல் முன்பதிவை நடத்தியது? இதற்காக ஒரு சுற்றறிக்கையை ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சுமார் 40 லட்சம் முன்பதிவு நடந்ததால் இந்த குழப்பம் உண்டானது.
எனவே பாந்த்ராவில் நடந்த நிகழ்வுக்கு ரயில்வே அமைச்சகமும் பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்காக ரயில்வே அமைச்சரின் ராஜினாமாவை மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கேட்பாரா?” என வினா எழுப்பி உள்ளது.