மும்பை

காராஷ்டிர மாநில அரசு 11 ஆம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் குடும்ப வகைகளில் ஒற்றை பெற்றோர் மற்றும் சேர்ந்து வாழ்தலை சேர்த்துள்ளது.

                                                                        மாதிரி புகைப்படம்

முந்தைய கால கட்டத்தில் குடும்பங்கள் இரு வகையாக பிரிக்கப்பட்டிருந்தன.   ஒன்று கூட்டுக் குடும்பம் ஆகும்.  மற்றது தனிக் குடும்பம் ஆகும்.   நாம் அனைவரும் முன்பு அறிந்த வகையில் கூட்டுக் குடும்பம் என்பது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக வசிப்பதும் தனிக் குடும்பம் என்பது கணவன் மனைவி மட்டும் வசிப்பது ஆகும்.

ஆனால் தற்போதைய நிலையில் பலவகையாக குடும்பங்கள் மாறி உள்ளன.  சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று ஒரு பாலினத்தவர் மணம் புரிந்து வாழ்வது தவறில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.   அது மட்டுமின்றி மணம் புரியாமல் உறவு கொள்வதும் சேர்ந்து வாழ்வதும் சட்டப்படி தவறில்லை எனக் கடந்த 2013 ஆம் வருடம்  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஒட்டி மகாராஷ்டிர மாநில அரசின் பாடப்புத்தகப் பிரிவான பாலபாரதி அம்மாநில 11 ஆம் வகுப்பு சமூகவியல் பாடப் புத்தகத்தில் இந்த 2019-20 ஆம் வருடத்தில் மாறுதல் செய்துள்ளது.  இந்த புத்தகத்தில் ஒரு பாலின குடும்பம், ஒற்றை பெற்றோர் குடும்பம்,  சேர்ந்து வாழும் குடும்பம் மற்றும் மாற்றாந் தாய் அல்லது தந்தை உள்ள குடும்பம் ஆகியவற்றைப் பாடத்தில் சேர்த்துள்ளது.

இந்த பாடபுத்தகத்தில் ஒர் பாலின திருமணம், பாலின பாகுபாடின்மை குறித்தும் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.   இவை அனைத்தும் 21 ஆம் நூற்றாண்டு குடும்பம் என்னும்  தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.