மும்பை: மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்க உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் அரியணை ஏறிய நாளில் இருந்து, பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும், மராத்தியை கட்டாயம் ஆக்குவதற்கான சட்டத்தை கொண்டுவர உள்ளார். சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ போன்ற மாநில சாரா வாரியங்களில் மராத்தியை கட்டாய மொழியாக மாற்றும் திட்டத்தை முன்வைக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இதுபற்றி அதிகாரிகள் கூறி இருப்பதாவது: மராத்தியை கட்டாய மொழியாக மாற்றும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் பல பள்ளிகள் இந்த உத்தரவை பின்பற்றவில்லை.
ஆனால் மராத்தி மொழியை கட்டாய பாடமாக மாற்ற எந்த விதியும் நடைமுறையில் இல்லை. மத்திய வாரியங்களின் கீழ் உள்ள பள்ளிகள் எங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இணை அமைச்சர் விஸ்வஜித் கடம் கூறியிருப்பதாவது: அனைத்து வாரியங்களிலும் மராத்தியை கட்டாயமாக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
நீங்கள் மகாராஷ்டிராவில் தங்கியிருந்தால், நீங்கள் மராத்தி பேச வேண்டும், எழுத வேண்டும். அனைத்து பள்ளிகளும் மாநில உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அவர்கள் அவ்வாறு செய்ய தவறினால், அத்தகைய பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை போன்று, மகாராஷ்டிரா அரசும் ஆரம்ப பள்ளிகளில் மராத்தியை கட்டாயமாக்கும் ஆக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறது. உத்தவ் தாக்கரே அரசு இந்த நடவடிக்கையை எடுத்தால், மராத்தியர்களின் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும் என்று நம்புகிறது.