மும்பை: மகாராஷ்டிரா அரசானது கொரோனா பாதிப்புகள் பற்றிய கவனத்தில் இருந்து, விலகி இறப்புகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
தேசிய அளவில் கொரோனா தொற்றுகள் அதிகம் இருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான். ஜூன் மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் கொரோனாவுக்கு 1544 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இருந்து பலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மாறி இருக்கிறது.
அதாவது, மே மாதம் 1827 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதன் மூலம் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவின் சதவீதம் 40 சதவீதம் ஆகும்.
பரிசோதனைகள், கொரோனா நோயாளிகளை கண்டறியவது போன்ற நடவடிக்கைகளில் இருந்து இறப்புகளை கட்டுப்படுத்துவதை நோக்கி நகர்ந்து இருக்கிறோம். குறிப்பாக மூத்த குடிமக்களை நோக்கி எங்களின் கவனம் அதிகளவு திரும்பி இருக்கிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
இந்தியாவின் உச்சக்கட்ட கொரோனா மையமாக கண்டறியப்படுவது மும்பை நகரம். கடந்த 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை மொத்தம் 834 பேர் பலியாகி உள்ளனர். மே மாதம் மட்டும் 989 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
கூடுதல் நகராட்சி ஆணையாளர் சுரேஷ் ககானி கூறுகையில், உயிரிழப்பு தான் அதிக கவலையை தருகிறது. 1500 என்ற எண்ணிக்கையை ஒட்டியே தினமும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை இருக்கிறது என்றார். 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருக்கும் ஒரு வார்டில் உள்ள அதிகாரி கூறுகையில், இந்த வார்டில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனார் 60 வயதை கடந்தவர்கள்.
ஏற்கனவே பல உடல் உபாதைகளில் இருந்தவர்கள். ஆகவே தான் நாங்கள் மூத்த குடிமக்களை உடனடியாக கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.