மும்பை:

ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தில் சீர் திருத்தம் கொண்டு வர மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தொழிலாளர் சீர்திருத்த திட்டங்களை மகாராஷ்டிரா மாநில பாஜ அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதில் ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தில் சீர் திருத்தம் கொண்டு வரும் அறிவிப்பை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே குறைந்தபட்சம் 20 மற்றும் அதற்கு மேல் உள்ள தொழிலாளர் பணியாற்றும் நிறுவனங்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வரும். புதிய அறிவிப்பின் மூலம் 50 தொழிலாளர்கள் முதல் அதற்கு மேல் உள்ள நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

20 முதல் 49 தொழிலாளர் உள்ள சிறு நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் வராது.  இந்த தொழிலாளர்களின் பணி நேரம், சம்பளம், கேண்டீன், ஓய்வுஅறை, பெண்கள் பாலூட்டும் அறை, விடுமுறைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இருக்கும். இந்த ஒப்பந்ததாரகள் அரசில் பதிவு பெற்று உரிமம் பெற வேண்டும். இது தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவுவதோடு, முறையற்ற தொழிலாளர்களுக்கு அங்கிகாரம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் தொழிலாளர் உரிமை பாதிக்கும் என்று கூறி இச்சட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்க க;ட்டமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் சிறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கும். அதோடு பெரிய நிறுவனங்கள் 4 முதல் 5 குழுக்களாக பிரித்து ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். குறைந்தபட்ச ஊதியம், சேம நலநிதி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.