மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு நவம்பர் 23ம் தேதி வெளியான நிலையில் பத்து நாட்களாக அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
பாஜக தலைமையில் மகாயுதி கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை வென்று அமோக வெற்றிபெற்றது.
பாஜக 132 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது, சிவசேனை 57, என்.சி.பி. 41 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இருந்தபோதும் தற்போது முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் முன்னாள் முதல்வர் பட்நாவிஸ் இடையே முதல்வர் பதவிக்கான மோதல் நீடித்து வருகிறது.
இதுதொடர்பாக பாஜக தேசிய தலைமையுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மகாராஷ்டிரா திரும்பிய ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த கிராமத்துக்கு சென்றார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஏக்நாத் ஷிண்டே ஓய்வில் இருந்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில் “5 டிசம்பர் 2024, வியாழன் அன்று மாலை 5 மணிக்கு, மும்பை ஆசாத் மைதானத்தில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மகாயுதி அரசின் பதவியேற்பு விழா நடைபெறும்” என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவாங்குலே சனிக்கிழமை அன்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஏக்நாத் ஷிண்டே “முதல்வர் பதவி குறித்து பாஜக தான் முடிவு செய்யும்” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், கூட்டணி அரசில் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா ? என்று செய்தியாளர் கேட்டதற்கு அது குறித்து பேசிவருவதாக ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.
இதனால், பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி இடையே ஆட்சி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது கல்யாண் தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ள 37 வயதான ஸ்ரீகாந்த் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.