மும்பை: உத்தவ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரஅரசுக்கு ஆதரவு வாபஸ் பெறுவதாக ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளனர். இதனிடையே இன்று மதியம் 2மணிக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்வது உறுதியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 55 எம்எல்ஏக்களை கொண்ட சிவசேனா கட்சி தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன்  மகா விகாஸ் அகாதி கூட்டணி என்ற  என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில்,  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வுக்கு எதிராக 38 எம்எல்ஏக்கள் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக அம்மாநில அரசு ஆட்டம் கண்டுள்ளது.

இதற்கிடையில்,  அதிருப்தி எம்எல்ஏக்களில் 16 பேருக்கு தகுதிநீக்க நோட்டீஸ் அவைத் தலைவர் அனுப்பியருந்த நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையின்போது, மகா விகாஸ் அகாதி  அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படுவதாக ஏக்நாத்ஷிண்டே தெரிவித்துள்ளார். தனது தலைமையில் 38 எம்எல்ஏக்கள் ஆதரவை திரும்பப்பெறுவதாக உச்சநீதிமன்றத்தில்  கூறினார். மேலும், மகாராஷ்டிர அரசு பெரும்பான்மை இழந்ததாகவும் ஷிண்டே விளக்கம் அளித்துள்ளார்.

ஷிண்டே  தனக்கு 37 சிவசேனை எம்எல்ஏக்கள் மற்றும் 9 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக   கூறி வருகிறாா். காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டுமென்பதே அவா்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. மேலும், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய  விசாரணையின்போது, மகாராஷ்டிர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், சிவசேனை சாா்பில் மகாராஷ்டிர உயா் கல்வித் துறை அமைச்சராக இருந்த உதய் சாமந்த், குவாஹாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று அதிருப்தி அணியுடன் இணைந்தாா்.

இதற்கிடையில், சிவசேனாவின் கிளர்ச்சி எம்எல்ஏ சுபாஷ் சப்னே உத்தவ் தாக்கரேவுக்கு கேள்வி எழுப்பி  வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவை கைது செய்த சகன் புஜ்பாலுடன் அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் போது உங்களுக்கு வலி ஏதும் ஏற்படவில்லையா?” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுடன் தொலைபேசியில் ஏக்நாத் ஷிண்டே பேசினார். இந்த நிலையில், 16 எம்.எல்.ஏக்களுக்கு சிவசேனா தலைமை அனுப்பிய தகுதிநீக்க நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதனிடையே இன்று மதியம் 2மணிக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே அழைத்துள்ளார்.

இப்போதைய நிலையில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக அவரது  மகன் ஆதித்ய தாக்கரே மட்டுமே  உள்ளது குறிப்பிடத்தக்கது.