பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகாராஷ்டிரத்தில் நவம்பர் 14 முதல் 19 வரை 6 நாட்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் நானா படேல் அறிவித்துள்ளார்
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. லிட்டர் பெட்ரோல் டீசல் விலை ரூ.100 தாண்டியது, பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலி நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் எதிரொலித்தது. பாஜக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது. அதையடுத்து, கடந்த 4ந்தேதி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் விலை குறைத்து மத்தியஅரசு உத்தரவிட்டது. மேலும், மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் சற்று விலை குறைக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வரியை குறைக்க மறுத்துவிட்டன. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படேல்இ பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சாதாரண மக்களை பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்யும் மத்திய அரசின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் நவம்பர் 14 முதல் 19 வரை மாநிலம் முழுவதும் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.