மும்பை
மும்பை பெருநகர மாநகராட்சிக்கான தண்ணீர் வரி செலுத்தாதோர் பட்டியலில் மகாராஷ்டிர முதல்வர் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன.
மும்பை பெருநகர மாநகராட்சிக்கு வரவேண்டிய தண்ணீர் வரி பாக்கி கோடிக்கணக்கில் உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் ஷகீல் ஷேக் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அளித்தார். அதற்கு மும்பை பெருநகர மாநகராட்சி பதில் அளித்துள்ளது. அந்த பதிலில் மாநகராட்சிக்கு தண்ணீர் வரி செலுத்தாதோர் பட்டியல் இணைக்கப் பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பல அமைச்சர் இல்லங்களுக்கான தண்ணீர் வரி செலுத்தப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் இல்லத்தில் ஆறு தண்ணீர் இணைப்பு உள்ளதாகவும் மொத்தம் ரூ.7.44 லட்சம் தண்ணீர் வரி பாக்கி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது,
இதை தவிர மாநில நிதி அமைச்சர் சுதிர் முங்கண்டிவார், கல்வி அமைச்சர் வினோத் தாடே, விட்டு வசதி அமைசர் பிரகாஷ் மேதா, பெண்கள் நல அமைச்சர் பங்கஜா முண்டே உள்ளிட்ட பலர் உள்ளனர். குறிப்பாக நீர் வள அமைச்சர் கிரிஷ் மகாஜன் இல்ல தண்ணீர் வரியும் செலுத்தப்படாமல் உள்ளது. இதைத் தவிர மலபார் ஹில் பகுதியில் அமைந்துள்ள அரசினர் விருந்தினர் விடுதி ரூ.12.04 லட்சம் தண்ணீர் வரி செலுத்த வேண்டி உள்ளது.
சமூக ஆர்வலர் ஷகீல் ஷேக், “மும்பை வாசிகள் யாராவது தண்ணீர் வரி செலுத்தவில்லை என்றால் மாநகராட்சி உடனடியாக தண்ணீர் இணைப்பை துண்டிக்கிறது. அதையே முதல்வர் இல்லத்தில் செய்யப்படுமா? உதாரணத்துக்கு முதல்வர் இல்லத்தில் 50 பேர் வசிப்பதாகவும் 200 பேர் வந்து போவதாகவும் வைத்துக் கொண்டால் அவர் இல்லத்துக்கு மட்டுமே ஏராளமான தண்ணீர் தேவைப்படும். வறட்சி நிலவும் இந்த நேரத்தில் இது மிகவும் அதிகமாகும்” என கூறிஉள்ளார்.
அமைச்சர் இல்லங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அமைச்சர்களை குறை கூற முடியாது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித் துறை, “முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தண்ணீர் வரி பாக்கி கடந்த நவம்பர் மாதம் செலுத்தப்பட்டுள்ளது. மே மாதத்துக்கான பில்லில் தவறுதல் இருந்ததால் அனைத்து இல்ல தண்ணீர் வரி செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் வரிகள் செலுத்தப்படும். “ என தெரிவித்துள்ளது.