மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல 54 கோடி ரூபாய் பயண கட்டணத்தை வழங்கி உள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.
இந்தியாவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதிலிருந்து அந்தந்த மாநிலங்களில் உள்ள  உள்ளூர் தொழிலாளர்கள் முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் வரை பலரின் வாழ்க்கை கேள்விக்குறியானது. உரிய வருமானமும் இன்றி வேலையும் இன்றி அவர்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகினர். பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
வர்த்தக நகரான மும்பையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 6 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் விரைவில் சொந்த ஊர் செல்லவேண்டும் என விரும்பினர். இது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் மத்திய, மாநில அரசுளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதே போல மற்ற மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களும் இதே மனநிலையில் இருந்தனர். இந் நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது சொந்த மாநிலத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணக் கட்டணச் செலவுகளைச் செலுத்த முதல்வர் நிவாரண நிதியில் இருந்து பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதன்படி மாநிலத்தில் உள்ள 36 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ .54.74 கோடி தொகையை அவர் வழங்கி உள்ளார். அதன்படி, மும்பை நகர ஆட்சியருக்கு 12.96 கோடி தரப்பட்டுள்ளது. மும்பை புறநகர் ஆட்சியருக்கு 10 கோடி அளிக்கப்பட்டுள்ளது. தானே ஆட்சியருக்கு 4.80 கோடியும், ராய்காட் ஆட்சியருக்கு 2.50 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.