மும்பை

காராஷ்டிராவின் அமைச்சரவையில் உள்ள பாஜக அமைச்சர் சம்மந்தப்பட்ட நிறுவனம் வங்கிக்கு ரூ.51 கோடி கடனை திருப்பித் தரவில்லை என புகார் பதியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சம்பாஜி பாடில் நிலங்கேகர் பாஜக வை சேர்ந்தவர்.    விக்டோரியா அக்ரோ ஃபுட் இண்டஸ்டிரீஸ் என்னும் தனியார் நிறுவனம் யூனியன் வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கியில் இருந்து கடந்த 2009 ஆம் வருடம் கடன் வாங்கி உள்ளது.   தலா ரூ. 20 கோடிக்கான இந்தக் கடனுக்கு அமைச்சர் நிலங்கேகர் பிணை அணித்துள்ளார்.

இரண்டு வருடங்கள் இந்த கடனுக்கு வட்டி செலுத்திய அந்த நிறுவனம் கடந்த 2011ஆம் வருடத்துக்கு பின் எந்த தொகையும் செலுத்தவில்லை.  அந்த கடன் தற்போது  வட்டியும் முதலுமாக மொத்தம் ரூ.76 கோடி நிலுவையில் உள்ளது.   இதில் நிறுவனங்களின் சொத்துக்களை ஏலம் விட்டதன் மூலம் வங்கிகளுக்கு ரூ25 கோடி கிடைத்துள்ளது.

மீதமுள்ள ரூ. 51 கோடியை வாராக் கடன் என வங்கிகள் அறிவித்துள்ளன.  வங்கி அதிகாரி ஒருவர், “இரு வங்கிகளிடம் இருந்தும் தலா ரூ.20 கோடி இந்த நிறுவனம் கடன் வாங்கி உள்ளது.   ஆனால் வட்டியை மட்டுமே இரு வருடத்துக்கு செலுத்தி உள்ளது.   தற்போது இரு வங்கிகளுக்கும் சேர்ந்து தர வேண்டிய ரூ.51 கோடியை ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என வங்கிகள் ஆணையிட்டுள்ளன.  இதுவரை கடனை  அந்த நிறுவனம் செலுத்தாததால் அமைச்சர் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளன” என தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைச்சர் நிலங்கேகர் மறுத்துள்ளார்.  அவர், “இந்த நிறுவனத்தின் கடனுக்கு நான் பிணை மட்டுமே அளித்துள்ளேன்.  நிறுவனம் எனக்கு சொந்தமானது இல்லை.   என் மைத்துனர் மட்டுமே இந்த நிறுவனத்துக்கு ஒரே உரிமையாளர்:  என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த நிறுவனம் குறித்து கடந்த 2016 ஆம் வருடம் ஜூலை 22ஆம் தேதி அன்று முதல்வர் தேவேந்திய ஃபட்னாவிஸ், “அமைச்சர் நிலங்கேகர் வங்கியில் மோசடி செய்துள்ளார் என கூறப்படுவது தவறானது.  அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஏதும் முறைகேடு நிகழ்த்தி இருக்கலாம்.   அமைச்சர் அந்த நிறுவனம் வாங்கிய இந்தக் கடனுக்கு பிணை மட்டுமே அளித்துள்ளார்”  என சட்டப் பேரவையில் தெரிவித்த்ள்ளார்.