மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவாங்குலே இன்று மாலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “5 டிசம்பர் 2024, வியாழன் அன்று மாலை 5 மணிக்கு, மும்பை ஆசாத் மைதானத்தில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மகாயுதி அரசின் பதவியேற்பு விழா நடைபெறும்” என்று பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் மகாயுதி கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை வென்று அமோக வெற்றிபெற்றது.
இருந்தபோதும் முதல்வர் பதவியாருக்கு என்பதில் இந்த கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்து வருகிறது.
பாஜக 132 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது, சிவசேனை 57, என்.சி.பி. 41 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இருந்தபோதும் தற்போது முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் முன்னாள் முதல்வர் பட்நாவிஸ் இடையே முதல்வர் பதவிக்கான மோதல் நீடித்து வருகிறது.
இதையடுத்து அமித் ஷா, நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்களை சந்தித்து பேசிய மகாயுதி கூட்டணி கட்சி தலைவர்கள் முக்கிய இலக்காக்களை கேட்பதாக தகவல் வெளியானது.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மும்பை திரும்பிய இடைக்கால முதல்வர் ஷிண்டே தனது சொந்த மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அமித் ஷா, நட்டா உடனான பேச்சு முதல்கட்ட பேச்சு தான் என்றும் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை அடுத்த சில தினங்களில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
மகாயுதி கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா முதல்வராக பதிவியேற்கப் போவது யார் என்று தெரியாத நிலையில் வரும் டிசம்பர் 5ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்திருப்பது மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.