யவத்மால், மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நாடெங்கும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. டில்லியில் இதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் 5 வயதுக்குட்பட்ட பல குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது.,
அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள யவத்மால் பகுதியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது. அதில் 12 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் (கைதுடைப்பான்) அளிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
யவத்மால் மாவட்ட குழுவின் தலைவர் ஸ்ரீகிருஷ்ண பஞ்சால், “ஐந்து வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் சானிடைசர் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். இதையொட்டி ஒரு சுகாதார பணியாளர், மருத்துவர், ஆஷா பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.