ராமநாதபுரம்: நாளை மகாளய அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரத்தில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இதையொட்டி, ராமேஷ்வரம் மற்றும் சேதுக்கரை கடல்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டு உள்ளனர்.
அக்டோபர் 2ந்தேதி (நாளை) மகாளய அமாவாசை. இந்த நலாள் நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் அதே வேளையில் முன்னோர்களை மதிக்க இந்துக்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்குகிறது. அதாவது, ஷ்ராத் அல்லது பித்ரு பக்ஷத்தின் முடிவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, இது 16 நாட்கள் நீடிக்கும் இந்துக்கள் சடங்குகள் மற்றும் தங்கள் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் காலமாக கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் மகாளய அமாவாசை, இந்துக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான கடைசி வாய்ப்பை வழங்குகிறது. இந்து மத நம்பிக்கையின் படி, இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் வசிக்கின்றன, இது வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ளது.
பித்ரு பக்ஷ கட்டம் என்பது ஆன்மாக்கள் தங்கள் சந்ததியினரைப் பார்க்க ஒரு வாய்ப்பாகும். எனவே, மக்கள் தங்கள் முன்னோர்களை நினைவுகூரவும், அவர்களுக்கு நன்றி செலுத்தவும் சடங்குகளைச் செய்கிறார்கள். அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வழியாகவும் சடங்கு. மஹாளய அமாவாசை அன்று செய்யப்படும் பித்ரு பக்ஷ சடங்குகள் சிறப்பானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த சடங்குகள் ஆத்மாக்கள் அமைதி மற்றும் இரட்சிப்பை அடைய உதவுவதாகவும் நம்பப்படுகிறது.
இதனால் புனித தீர்த்தங்களில் நீராடி திதி கொடுத்தல், தர்ப்பணம் செய்வதால் ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என ஜதீகம் உள்ளது. இதில் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த காலமாக, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய பட்ஷம் கருதப்படுகிறது. ஆவணி பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி மாத அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்ஷம் என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் வடக்கே காசியும், தெற்கே தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரமும் முக்கிய தீர்த்த தலமாக விளங்குகிறது.
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள், தேவிப்பட்டிணம் நவபாஷன தீர்த்தக் கடற்கரை, திருப்புல்லாணி சேதுக்கரை, கடலாடி அருகே மாரியூர் ஆகிய கடற்கரைகள் ராமாயணம் போன்ற புராணங்கள், இசிகாசங்களுடன் தொடர்புடைய தீர்த்த தலங்கள் என்பதால் லட்சக்கணக்கானோர் வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகளை செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து புனித தீர்த்தமாடிய பிறகு ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்பிகை உடனுரை ராமநாத சுவாமி கோயில், தேவிப்பட்டிணம் கடற்கரையில் உள்ள நவபாஷன தீர்த்தம், அக்னி தீர்த்தம், ராமர் தீர்த்தம், அங்குள்ள கடலடைத்த பெருமாள் கோயில். திருப்புல்லாணி சேதுக்கரை கடல், சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர், திருப்புல்லானி பத்மாஷினி தாயார் உடனுறை ஆதிஜெகநாதபெருமாள் கோயில். கடலாடி அருகே உள்ள மாரியூர் கடல் மற்றும் பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயில் ஆகியவற்றில் தரிசனம் செய்தும், மோட்ச தீபங்கள் ஏற்றியும் வழிபாடு செய்கின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மை பணிகள் செய்யப்பட்டு, சுண்ணாம்பு பொடி, கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து, தற்காலிக மருத்துவ முகாம், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளது.
குடிநீர், கழிவறை, உடை மாற்றும் அறை போன்ற ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானம்,தேவஸ்தானம் ஆகியவை சிறப்பாக செய்துள்ளனர்.
நகரப்பகுதி மற்றும் கடற்கரை பகுதிகளில் வாகன நெரிசலை தவிர்க்க தற்காலிக மாற்று வழிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல் மற்றும் பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மஹாள அமாவாசையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதுபோன்று சேதுக்கரை, தேவிப்பட்டிணத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்தும், மாரியூர்க்கு சாயல்குடி, மலட்டாறு முக்குரோடு வழியாக கூட்டத்திற்கு ஏற்றவாறு சிறப்பு பஸ்கள் என மொத்தம் 100 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மற்றும் காரைக்குடி கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரைகளில் வாகனம் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்கள் குறிப்பிட்ட தூரம் மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால் உரிய பார்க்கிங்கில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். நீராடி விட்டு களையும் துணிகளை உரிய தொட்டியில் போடவேண்டும். தங்க நகை, மொபைல், பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், உடன் அழைத்து வரப்படும் குழந்தைகள் முதியோர்களை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும். உதவிகள் தேவைப்பட்டால் காவல் கட்டுபாடு அறை மற்றும் கோயில் நிர்வாகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நவராத்திரி விழாவின் தொடக்கமாகும். மஹாளய திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. துர்கா தேவி பூமிக்கு தனது பயணத்தைத் தொடங்குகிறார் என்று கருதப்படுகிறது, இது பக்தர்களால் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது, பக்தர்கள் பந்தல்களில் துர்கா தேவியின் சிலையை நிறுவி, ஒன்பது நாட்களும் வழிபடுவார்கள்.