பாட்னா: பீகாரில் மகாதலித் சமூகத்தவரிடையே செல்வாக்கை இழந்து காணப்படுகிறார் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பீகாரில் ஆட்சிசெய்துவரும் நிதிஷ்குமாரால், கடந்த 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த மகாதலித் என்ற பிரிவு. ஆனால், அந்த மக்களுக்கு வாக்குறுதியளித்த எதையும் நிதிஷ்குமார் செய்யவில்லை என்று கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களின் நிலை மாறப்போவதில்லை என்று விரக்தியுடன் தெரிவிக்கின்றனர், அந்த மகாதலித் கூட்டணியிலுள்ள ஒரு சாதியான ரிஷிதேவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும், மகாதலித் பிரிவு மக்களுக்கு 1306.8 சதுர அடி நிலம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது எங்கள் சமூகத்தில் இறந்தவர்களைப் புதைப்பதற்குகூட இடமில்லை. நாங்கள், இரவு நேரத்தில், ரகசியமாக பிணங்களைப் புதைத்து வருகிறோம். முஸ்லீம் நில உரிமையாளர்களுக்கும் எங்களுக்குமான பிரச்சினை தொடர்கிறது என்கின்றனர் மகாதலித் பிரிவு மக்கள்.
தற்போது, பீகார் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் நடைபெற்றுவரும் நிலையில், மகாதலித் பிரிவு மக்களின் அதிருப்தி, நிதிஷ்குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.