கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்ட, பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி ஈசனை தரிசிக்க பிப்ரவரி 1 முதல் மே வரை 4 மாதங்கள் அனுமதி வழங்கப்படுவதாக கோவை மாவட்ட வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென்கயிலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மேற்குத்தொடர்ச்சிமலை பூண்டியில், உள்ளது. இங்கு சுயம்புவடிவில் வீற்றிரும் ஈசனை தரிசிக்க கோவிலின் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக உள்ள 7 மலைகளை கடந்து அங்கு செல்ல வேண்டும். கடினமான இந்த மலைகளை ஏறி ஆண்டுதோறும் சிவராத்தி உள்பட விசேஷ தினங்களில் பல ஆயிரம் பேர் மலையேறி சென்று ஈசனை தரிசித்து வருகின்றனர்.
மகாசிவராத்திரி மற்றும் சித்ராபவுர்ணமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்து, 7 மலைகளில் ஏறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில், 2025ம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி அடுத்த மாதம் 26-ந்தேதி வருகிறது. இதனையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக, வனத்துறையினர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
இதில் வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரையிலும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே அதுபோன்ற பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வெள்ளியங்கிரி கோவில் மற்றும் மலையேறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.