திருவண்ணாமலை: பிரசித்திப்பெற்ற தீப திருவிழாவின் முக்கிய பங்காக அமையும் மலையில் ஏற்றப்படும் தீபத்திற்கான மகாகொப்பரை, அண்ணாமலையார கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலில் தீபத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா மிக எளிமையாக நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் கோயிலில் நாளை (29-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. 11 நாட்களுக்கு மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்னதாக, தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, தங்கக் கொடி மரம் முன்பு ஆணும் பெணும் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக, சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
இந்த நிலையில் திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது. இதை தொடர்ந்து முக்கிய நிகழ்வான மகா தீபமானது நாளை மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள பிரம்மாண்டமான 2,668 அடி கொண்ட மலை மீது ஏற்றப்படும்.
முன்னதாக மகா தீபத்தை ஒட்டி பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் 2700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்த உள்ளனர். அத்துடன் நாளை மற்றும் நாளை மறுநாள் கோவிலில் கிரிவலம் வரவும், மலையில் ஏறவும், அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.