திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளதால், இதை காண பல லட்சம் பக்கதர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போவதை தவிர்க்க காவல்துறையினர் குழந்தைகளின் கைகளில் ‘டேக்’ பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான கார்த்திகை மகா தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
இன்று காலை 3.30 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் கருவறை எதிரில், மூலவர் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பஞ்ச பூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இது கார்த்திகை மாதம் பரணி நட்சத்திர நாளில் ஏற்றப்படும் தீபம் ஆகும். இதைத்தொடர்ந்து இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலைஉச்சியில் அனேகன், ஏகன் என்பதை விளக்கும், மஹாதீபமும் ஏற்றப்பட உள்ளன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீபத்தை காண குறைந்தது 35 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது. சுமார் 15ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவரை வசதிகளும் ஆங்காங்கே செய்யப்பட்டு உள்ளன. மேலும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற தன்னார்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மகா தீபத்தை காண பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போவதை தவிர்க்க அவர்கள் கையில், பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் கட்டப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை யாரும் கண்டால், அவர்களின் கைகளில் கட்டுப்பட்டுள்ள டேக்கில் உள்ள எண்களையோ அல்லது அருகில் உள்ள காவல்துறையினரையோ தொடர்புகொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.