ஜகர்தா: “இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 என பதிவான நிலையில், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. இதனால், பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அந்த பகுதியானது, ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளதே அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணமாக இருக்கிறது ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். நிலநடுக்கம் மட்டுமின்றி எரிமலைகள் சூழ்ந்து இருப்பதால் அதன் வெடிப்புகளும் அடிக்கடி ஏற்படும். இதனால் அங்கு நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ந்தேதி அங்குள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி இந்தியா உள்பட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஆச்சே மாகாணத்தின் தென் – தென்கிழக்கு நகரமான சிங்க்கில் பகுதியை மையமாகக்கொண்டு உருவான நிலநடுக்கமானது 40 கி.மீ(30 மைல்கள்) சுற்றளவு மற்றும் 37 கி.மீ ஆழம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள்சேதம் குறிந்த எந்த தகவலும் இதுவரை வெளியாகிவில்லை. புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இன்றைய நிலநடுக்கம், ஆச்சே மற்றும் வட சுமத்ரா மாகாணங்களின் 4 மாவட்டங்களில் 3-10 நொடிகள் மட்டுமே உணரப்பட்ட நிலநடுக்கமானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் குவிந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்க மலேசியாவிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.