கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் வெளியான படம் ‘மாஃபியா சேப்டர் 1’ தற்போது இந்த திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் போலீஸ் விசாரணை செய்துள்ள விவரங்கள் ஒரு பலகையில் எழுதப்பட்டிருக்கும். இதில் அந்த போதை மருந்து கடத்தல் செய்பவனிடம் இவர்கள் தொடர்பிலிருப்பவர்கள் என்று சிலரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

ஆனால், உண்மையில் இது கனடாவில் ப்ரூஸ் மெக் ஆர்தர் என்ற கொலைகாரனால் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களே. அவன் கொன்ற எட்டுப் பேரில் ஐந்து பேரின் புகைப்படங்கள் இந்தக் காட்சியில், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புள்ளவர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்த அவர்களின் உறவினர் ஒருவர் இது முற்றிலும் கண்ணியமற்ற செயல்.என கண்டித்துள்ளார்.

இந்த விஷயம் குறித்து அறிந்த லைகா தரப்பு, சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு நிபந்தனையில்லா மன்னிப்புக் கேட்பதாகவும், இந்தியாவில் ஊரடங்கு முடிந்தவுடன் அந்தப் புகைப்படங்கள் படத்தில் மறைக்கப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும், படத்தில் பயன்படுத்த எந்த நோக்கமும் இல்லாமல், எதேச்சையாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களே அவை என்றும் விளக்கம் அளித்துள்ளது.