மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஒருவர் பேராசிரியரால் கத்தியால் குத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், இதழியில் துறையின் தலைவராகப் பணியாற்றி வருபவர் ஜெனிபா. அதே பல்கலைக்கழகத்தில், கவுரவ விரிவுரையாளராக ஜோதிமுருகன் என்பவர் பணியாற்றி வந்தார்,
ஜோதிமுருகனின் பணி நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அவரை ஜெனிபா, சஸ்பெண்ட் செய்தார். இதையடுத்து, அவர் பல்வேறு முறை ஜெனிபாவைச் சந்தித்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்குமாறு முறையிட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் ஜெனிபாவை அவரது துறை அறைக்குச் சென்று ஜோதிமுருகன் சந்தித்தார். அப்போது ஜெனிபாவுடன் வாக்குவாதம் செய்த ஜோதி முருகன் திடீரென ஜெனிபாவைக் கத்தியால் குத்தினார்.
ஜெனிபா பயத்தில் கூச்சலிட்டார். அங்கிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் ஜோதிமுருகனை பிடித்து, அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கத்திக்குத்தில், பலத்த காயமடைந்த ஜெனிபா மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜோதிமுருகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.