மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. . இன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீனாட்சி-சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவான இன்று முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான, ஏப்ரல் 19 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20 ஆம் தேதி திக் விஜயமும், 21ந்தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22 ஆம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதற்கிடையில், ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது .ஏப்ரல் 24 ஆம் தேதி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை பூ பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 27 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைகிறார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தேர்களை தயார்படுத்தும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்து, மதுரையே கோலாகலமாக காட்சி அளிக்கறது. சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் பல லட்சம் மதிப்பு பூக்களை கொண்டு வண்ண மயமான பந்தல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளனத. தொடர்ந்து அன்னதானம், மொய் விருந்து போன்றவைக்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை மீனாட்சியமன, பிரியாவிடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சியம்மன், வீதி உலாவின் போது, சிறுவர், சிறுமிகள் கடவுள் வேடமணிந்து கோலாட்டம் ஆடி வரவேற்பர்.
சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் அதிகாலை விமரிசையாக தொடங்கி 2 தேர்களும் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டு மீனாட்சியம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளி, அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சியம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்படுவார்கள்.
அங்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டு, அதன்பிறகு பிரியாவிடை- சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சியம்மன் சிறிய தேரில் எழுந்தருளி, பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து செல்வார்கள், தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து சுவாமி -அம்மன் தேரை இழுத்துச் சென்று, 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி வலம் வரும்.
தேருக்கு முன்பாக பக்தர்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் செல்வர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லும், அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனியே சிறிய சப்பரங்களில் செல்ல, பகல் 12 மணியளவில் மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் நிலையை வந்தடையும்.
திருக்கல்யாணத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன் சுவாமிக்கும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டுப் பரிவட்டங்கள் சாத்தப்படும். உபயதாரர் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். மேற்படி உற்சவம் ஆரம்பம் முதல் அழகர்கோயில், கள்ளழகர் ஆஸ்தானம் சேரும் நாளான ஏப்.23ம் தேதி முடிய கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபயதிருக்கல்யாணம், தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்தப்படுவதில்லை என கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் நான்கு மாசி வீதிகளிலும் புறப்பாடு நடைபெறும். எனவே, மதுரை நகர் விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு மற்றும் நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30அடி உயரத்திற்கு மேல் அமைத்துக் கொள்ளும் படியும் மற்றும் வேப்பிலைத் தோரணங்கள் ஆகியவற்றினையும் சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைத்துக் கொள்ளும் படியும் பொதுமக்கள் வியாபாரப் பெருமக்கள் ஆகியோரை கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருவிழா நாட்களில் காலை, இரவு இரு வேளைகளிலும் திருவீதிளில் சுவாமி புறப்பாடாகி வரும் அச்சமயம் பக்தர்களால் சுவாமிக்கு சாத்துப்படி செய்ய இறைவனுக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம். (கேந்திபூ. மருதை வேர்கள் வைத்துக் கட்டப்பட்டமாலைகள் சாத்துப்படிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது).
திருக் கல்யாணத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன் சுவாமிக்கும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டுப் பரிவட்டங்கள் சாத்தப்படும். உபயதாரர் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். மேற்படி உற்சவம் ஆரம்பம் முதல் அழகர்கோயில், கள்ளழகர் ஆஸ்தானம் சேரும் நாளான ஏப்.23ம் தேதி முடிய கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபயதிருக்கல்யாணம், தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்தப்படுவதில்லை என கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சித்திரை திருவிழாவையொடிடி, போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேவைக்கேற்ப மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. திருவிழாவை காணவரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி, மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.