மதுரை
இன்று மதுரையில் ஸ்மார்ட் சிடி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த நகரங்களில் மதுரையும் ஒன்றாகும். இங்குள்ள உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினசரி ஏராளமான வெளியூர், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.. அந்த பயணிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள புது மண்டபக் கடைகளுக்குச் செல்கின்றனர்.
அங்கு ஆடைகள், அழகு சாதனங்கள், புத்தகங்கள், திருவிழாப் பொருட்கள் , பாத்திரங்கள், நினைவு[ பொருட்கள் ஆகியவற்றை விரும்பி வாக்குவதுடன் அங்குள்ள தையல் கலைஞர்களிடம் ஆடைகள் தைத்து வாங்கிச் செல்கின்றனர். இந்த கடைகளால் புது மண்டபத்தின் அமைப்புக்கள் தெரிவதில்லை. எனவே இங்குள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டது.
அதையொட்டி ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் ரூ.7.91 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளுடன் கூடிய வகையில் குன்னத்தூர் சத்திரம் மூன்று தளங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புது மண்டபத்தில் செயல்பட்டு வந்த கடைகள் இங்கு மாற்றப்பட உள்ளன. இந்த வணிக வளாகத்தை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.
இந்த குன்னத்தூர் சத்திரம் மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் என அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.