மதுரை
கொரோனா பரிசோதனை செய்ய புது வகை கருவி ஒன்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர்.
உலகெங்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அனைத்து நாடுகளும் இந்தப் பணியில் மும்முரமாக இறங்கி உள்ளன. எனவே தற்போதைக்கு பரிசோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை மட்டும் வழியாக உள்ளது. தற்போது இந்தியாவில் அரசு சார்பில் இலவச பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் இதற்காக சுமார் ரூ.5000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலிககழகத்தை சேர்ந்த இயற்பியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர்கள் இணைந்து கொரோனா தொற்றைக் கண்டறிய புது வகை பரிசோதனை கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த கருவி நானோ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும், இதனால் மிகச் சிறிய அளவில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து பேராசிரியர்கள், “இந்த கருவியின் மூலம் கொரோனா தொற்றை உறுதி செய்ய ஒரு நிமிடம் மட்டுமே ஆகும். ஒருவரது ரத்தம் அல்லது சளி மாதிரிகளை இந்த கருவியில் செலுத்தினால் வெளிவரும் சிக்னலை வைத்து நானோ தொழில் நுட்பம் மூலம் உடலில் உள்ள கொரோனா பாதிப்பை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
பிசிஆர் கருவி மூலம் கொரோனா தொற்று உள்ளதை மட்டுமே உறுதி செய்ய முடியும். நாங்கள் வடிவமைத்துள்ள கருவியின் மூலம் உடலில் கொரோனா தாக்கம் எந்த அளவு உள்ளது என்பதை அளவிட முடியும். இதைக் கொண்டு நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை தேவையா என்பதை உறுதி செய்யலா. இந்த சோதனைக்கு ரூ.50 மட்டுமே செலவாகும். இதற்கான ஆய்வகம் அமைக்கவும் மிகக் குறைந்த அளவில் பணம் தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.