மதுரை: அறநிலையத்துறையின் கோயில் பணியாளர்கள் இடமாற்ற திருத்த விதிக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் உள்ள பணியாளர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக, அறநிலையத்துறையில் விதிகள் திருத்தப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், மனுகுறித்து விரிவான பதில் அளிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அறநிலையித்துறையின் அறிவிப்பை எதிர்த்து, தமிழ்நாடு முதுநிலை கோயில்கள் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சுதர்சனம், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் வெளித்துறை பணியாளர்கள், அதே நிலைக்கு ஈடான வேறு கோயில்களுக்கு இட மாறுதல் செய்ய வேண்டும். இதற்கான பட்டியலை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். இப்பட்டியலில் இருந்து மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் இடமாறுதல் செய்யப்படுவர் என்பது உள்ளிட்டவை அடங்கிய திருத்த விதிகள் அறநிலையத்துறை ஆணையரால் கடந்த ஜனவரி 25ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பு இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே, இந்த அரசாணை மற்றும் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி,‘‘அறங்காவலர் குழுவால் நியமிக்கப்படும் வெளித்துறை பணியாளர்களை எங்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்வது என்பது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார்.
இதையடுத்து அறநிலையத்துறை ஆணையரின் திருத்த விதிகளுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மனுவிற்கு அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 21ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.