மதுரை:
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் கிளை நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த ஆங்ணடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது, கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில், கல்லூரி மாணவி உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைய உள்ளதால் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இம்மாதம் 22-ம் தேதி தூத்துக்குடியில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறை அனுமதி மறுக்கவே, அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி ஏப்ரல் 26-ம் தேதி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் 22-ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்ப்டடது.
அப்போது வாதாடிய மனுதாரர் வழக்கறிஞர், நினைவஞ்சலி கூட்டம், தனியார் ஹோட்டல் ஒன்றில் அமைதியான முறையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அசம்பாவிதங்கள் எதும் நடைபெறாது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நினைவஞ்சலி கூட்டத்தை மே 22ம் தேதி அன்று தூத்துக்குடியில் உள்ள பெல் ஹோட்டலில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில், 250 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனைகளுடன் நீதிபதிகள் அனுமதி வழங்கினர். மேலும், நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக மனுதாரர் மற்றும் காவல்துறையினர் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.