துரை

துரை உயர்நீதிமன்றம் பிராவ விடுமுறைக்கு பயிற்சி ;பெண் மருத்துவர்களும் தகுதியானவர்கள் என உத்தரவிட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த கிருத்திகா, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில,

”தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை பொது அறுவை சிகிச்சை பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அப்போது என்னுடைய எம்.பி.பி.எஸ். கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தேன்.

அதை பெற்றுக்கொண்ட நிர்வாகம், படிப்பு முடிந்த பின்பு அரசு மருத்துவமனையில் 2 ஆண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற வேண்டும். அதன்பின்புதான் அசல் சான்றிதழ்களை தங்களிடம் ஒப்படைப்போம் என்ற ஒப்பந்தத்துக்கு சம்மதித்தேன். அதன்படி முதுகலை பட்டப்படிப்பை முடித்தேன். பின்னர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் 5.9.2019 அன்று நியமிக்கப்பட்டேன். அந்த நேரத்தில் எனக்கு குழந்தையும் பிறந்தது. இதனால் பிரசவ கால விடுமுறையில் இருந்தேன்.

பின்னர் 26.11.2021 அன்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தேன். இதையடுத்து என் அசல் கல்விச்சான்றிதழ்களை திருப்பி கொடுக்கும்படி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் கேட்டேன். அவர்கள் நிராகரித்தனர். என் கல்விச்சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்”

என தெரிவித்திருந்தார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு விசாரணை முடிவில்,

”மனுதாரர் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பின்பு, 2 ஆண்டுகள் பயிற்சி டாக்டராக பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உதவி அறுவை சிகிச்சை டாக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு 12 மாதம் பணியாற்றி இருக்கிறார். பின்னர் பிரசவத்துக்காக விடுமுறையில் 12 மாதம் இருந்து உள்ளார்.

அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ கால விடுமுறையாக 12 மாதம் அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில் மனுதாரரும் அரசு ஊழியர்களை போல 12 மாத பிரசவ விடுமுறையை பெற தகுதியானவர்தான். அவரது பிரசவ விடுமுறை நாட்களை பணிக்காலமாக கருத வேண்டும். எனவே மனுதாரர் மேலும் 12 மாதம் பயிற்சி டாக்டராக பணியாற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரது அசல் கல்விச்சான்றிதழ்களை 4 வாரத்தில் வழங்க வேண்டும்.”

என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.