மதுரை: மதுரையில் மருத்துவ மாணவி ஹரிணி உயிரிழந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரது உயிரிழப்பு கொரோனா தடுப்பூசியால் நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மதுரை அருகே வலி நிவாரண ஊசி போட்டுக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி ஹரினி (26) உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்தது. கோவிட் -19 தடுப்பூசிக்கும், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதுகலை மாணவி 26 வயதான ஹரினியின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்ளில் செய்திகள் பரவின.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், மதுரை மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுகலை மாணவராக இருந்த ஹரினி, மதுரை மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை துறையில் முதுகலை மாணவர் டாக்டர் அசோக் விக்னேஷை மணந்தார். கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் மேல அனுப்பனாடியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில்ஹரினி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கொரேனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, 4 வாரங்களுக்குப் பிறகு மார்ச் 5 ஆம் தேதி அவர், காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. “அவர்களது இல்லத்தில் அவருக்கு சிகிச்சையளிக்கும் முயற்சியில், அவரது கணவர் வலி நிவாரணி ஊசி டிக்ளோஃபெனாக் வழங்கியதாக கூறப்படுகிறது. சில மணி நேரம் கழித்து, அவர் வாந்தியெடுக்கத் தொடங்கி மயக்கமடைந்தார். பின்ன்ர அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்தார்.
இதுகுறித்து அவானியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, ஆர்.டி.ஓ விசாரணையும் தொடங்கப்பட்டதாகவும், அவருக்கு அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டதாக மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர் டாக்டர் கே.வி.அர்ஜுன்குமார் தெரிவித்துள்ளார். சுமார் 6 நாட்கள் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், , மார்ச் 11 பிற்பகல் இறந்தார்,
அவரது உடல் மார்ச் 12 ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது . அதில், அவரது மரணத்துக்கு காரணமாக, அனாபிலாக்டிக் ஷாக் (anaphylactic shock / கடுமையான ஒவ்வாமை எதிர்வினை) காரணமாக அவரது மூளை செயலிழந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரது கணவர் செலுத்தி வலி நிவாரணி ஊசி காரணமாக இருக்கலாம், அதனால்,அவருக்கு அனாபிலாக்டிக் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம், ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி நிவாரணி ஊசி டிக்ளோஃபெனாக் ( Diclofenac -painkiller injection) பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்படாத நிலையில், ஹரிணியின் கணவர் அதை உபயோகப்படுத்தயது அவரது மரணத்துக்கு காரணமாக இருக்கலாம், பொதுவாக வலிகளுக்கு ஊசி போடக்கூடிய நிவாரணி மருந்துகள் தவிர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, மருத்துவ மாணவி ஹரிணியின் மரணத்துக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.