ஆளும் அதிமுக அரசிடமிருந்து கிடைக்கும் தொடர் நெருக்கடிகளால் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜசேகர் விடுப்பில் சென்ற நிலையில், தற்போது மதுரை மாவட்டத்திற்கான புதிய ஆட்சியராக டி.ஜி வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தலின் போது வாக்கு எண்ணும் மையத்தில், பெண் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் நுழைந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகராஜன் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். நேர்மையாக செயல்பட்ட நாகராஜன், அரசியல் தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல், அங்கன்வாடி மைய ஊழியர்களை நியமித்தார். இதனால் ஆளும் தரப்புக்கு எதிராக இருப்பதாக கூறி தடாலடியாக மாற்றப்பட்டார்.
கடந்த ஜூலை 1ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜசேகர், மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார். ஆளும் கட்சி முக்கிய புள்ளிகளுக்கு ராஜசேகர் பணிந்து செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆளும் கட்சி தரப்பிலிருந்து தொடர் நெருக்கடிகள் அவருக்கு கொடுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் விடுப்பில் சென்றதாகவும் கடந்த 4ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினரால் தகவல் பரவியது.
இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி வினயை, மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ராஜசேகரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.
கடந்த 6 மாதங்களில் மட்டும் 3 மாவட்ட ஆட்சியர்களின் இடமாற்றங்களை தற்போது வரை கண்டுள்ள மதுரை மக்கள், ஒரே ஆண்டில் 4வது ஆட்சியரை வரவேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.