மதுரை
பாரம்பரியமாக தமுக்கம் மைதானத்தில் நடந்து வந்த சித்திரைத் திருவிழா பொருட்காட்சி இந்த வருடம் மாட்டுத்தாவணிக்கு இடம் மாறுகிறது.
மதுரை நகரில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவில் தமிழகம் மட்டுமில்லாது, உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். அப்போது மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு சார்பில் மாநகராட்சிக்குச் சொந்தமான தமுக்கம் மைதானத்தில் பாரம்பரியமாக அரசு பொருட்காட்சி நடக்கும். மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மைதானத்தில் குறிப்பிட்ட வாடகை நிர்ணயித்து சித்திரை பொருட்காட்சி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு வாடகைக்கு விடப்படும் . அரங்கு அமைப்பதைப் பொறுத்து ஒரு நாள் வாடகையாக ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வந்தது.
தற்போது தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் சென்னை வர்த்தக மையம் போல், ரூ.45.55 கோடியில் வர்த்தக மையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டு தமுக்கம் மைதானத்திற்குப் பதிலாக மாட்டுத்தாவணி அருகே உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் காலி இடத்தில் சித்திரைத் திருவிழா பொருட்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த இடத்தை சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
சித்திரைத் திருவிழா நடக்கும் இடத்திற்கும் மாட்டுத்தாவணிக்கும் சம்பந்தமில்லாததால் பொருட்காட்சி கடந்த காலங்களைப் போல் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கும் எனக் கூற முடியாது எனக் கருத்து நிலவுகிறது.