மதுரை: தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை இயங்க மத்திய அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்குப் பிரதமர் மோடி 2019 ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். ஆனால், மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. நிலம் தொடர்பான சட்டச்சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் இடத்தை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைய வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. முதல்வர் ஸ்டாலினும் பிரதமரிடம் இதுகுறித்து நேரில் வலியுறுத்தி இருக்கிறார் என்றார்.
தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தாலும், மருத்துவமனையின் எந்தெந்த பிரிவு கட்டிடங்களை எங்கெங்கு கட்டுவது உள்ளிட்டவற்றை ஆராய ஆலோசகரை நியமிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன், 150 படுக்கைகளுடன் கூடிய ஒரு தொற்றுநோய் பிரிவையும் சேர்த்துக் கட்டுவதற்கு 1977.8 கோடி ரூபாய் நிதி உதவி பெற ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனத்திடம் மத்தியஅரசு பேசியது. அதற்கு அந்த நிறுவனமும் கடந்த மார்ச் 26ஆம் தேதி ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு 50 மாணவர்களைச் சேர்க்க ஒன்றிய அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளது.
இதனால், தோப்பூரில் கட்டிடம் கட்டி முடிக்கும்வரை வாடகை கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை நடத்துவதற்கும், அதற்கான வாடகையைத் தருவதற்கும் மத்தியஅரசு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதனால், மருத்துவமனை மற்றும் கல்லூரி செயல்படும் வகையில் தற்காலிக கட்டிடம் தேர்வு செய்வது குறித்தும் அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆய்வு நடத்தப்படும்.
தற்காலிக கட்டிடம், விரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவது குறித்து எய்ம்ஸ் குழுவினருடன் ஆலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.