சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1900 கோடி மதிப்பீட்டில் விரைவில் அமையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதியளித்து இருப்பதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியாயை சந்தித்து பேசினார். அப்போது,  , தமிழக மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

தமிழகஅரசு வழங்கிய கோரிக்கை மனுவில்,

  • தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும்.
  • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக அமைக்க வேண்டும்.
  • கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும்.
  • 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ வேண்டும். 
  • தமிழகத்திலுள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரியைத் தொடங்க வேண்டும்.
  • உக்ரைனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழிவகை செய்ய வேண்டும்.
  • மருத்துவ பட்டமேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளை மாற்ற வேண்டும்.
  • தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி மருந்துகளை கூடுதலாக வழங்க வேண்டும்.
  • தமிழகத்துக்கு 15-வது நிதி ஆணையம் 2022-23-ம் நிதியாண்டுக்கு ஒப்புதல் அளித்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
  • அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாமல் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை மாநிலத்துக்கு ஒப்படைக்க வேண்டும்.
  • தமிழகத்துக்கு 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த ஒப்புதல் வழங்க வேண்டும்.

உள்பட பல கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ஆரம்பத்தில் ரூ.1,400 கோடி திட்டமிடப்பட்டு, தற்போது ரூ.1,900 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். கட்டுமானப் பணி வரைபடம் உள்ளிட்டவை தயாரிப்பதற்கு ஒரு குழு அமைத்து, அடுத்த வாரம் அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என்றார். எனவே, விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல், தமிழகத்துக்கு 15-வது நிதி ஆணையம் 2022-23-ம் நிதியாண்டுக்கு ஒப்புதல் அளித்த ரூ.801 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

மத்திய அமைச்சருடனான சந்திப்பின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன், தமிழக சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், டெல்லி தமிழ்நாடு இல்லம் செயலர் ஆஷிஷ் சாட்டர்ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.