மதுரை: மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு ரூ.2 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும்வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதத்திற்குள் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு 1,264 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனை கட்டுமானம் இதுவரை தொடங்கப்படவில்லை. நிலம் கையப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா என்பவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தகவல்பெறும் உரிமை சட்டத்தின் ( ஆர்டிஐ) படி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு அளிக்கப்பட்ட பதில், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை காண திட்ட மதிப்பீடு ரூபாய் ஆயிரத்து 264 கோடியில் இருந்து ரூ. 2 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த 2000 கோடியில் 85 சதவீதம் நிதி தொகையை ஜப்பான் ஜைக்கா நிறுவனம் கடனுதவி அளிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான கடன் ஒப்பந்தம் பற்றி டிசம்பர் 24 ல் இந்தியாவின் ஜைக்கா நிறுவன குழுவும், ஜப்பான் குழுவும் ஆலோசித்ததாகவும், இதுகுறித்து, மார்ச் 31-க்குள் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டு உள்ளது.
அதுபோல, மதுரை எய்ம்ஸ்சில் மாணவர் சேர்க்கை தொடர்பான கேள்விக்கு, தற்போது அங்கு எந்தவொரு மாணவர் சேர்க்கையும் கிடையாது என்றும், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னரே மாணவர் சேர்க்கை நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.