சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில், எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை சுற்றியுள்ள கிராமங்கள், கிராம பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி தருவதற்காக எய்ம்ஸ் நிர்வாகம் ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதாவது, மதுரை, தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, அரசியல் மற்றும் சட்ட பிரச்சினைகளால், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்காமல் இழுத்தடுக்கப்பட்டு வந்தது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்காக திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி என மதிப்பிடப்பட்டது. இதற்கு, . ஜப்பான் பன்னாட்டு ஜெய்க்கா நிதி நிறுவனம் 82 சதவீதம் வீதம் வழங்கும் ரூ.1627.70 கோடி கடனுக்கு 2021 மார்ச்சில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து, ஜெய்க்கா நிதி நிறுவனத்திடம் கடன் பெற்ற நிலையில் 2023 ஆக.,17 மருத்துவமனை கட்டுமான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க எல் அன்ட் டி நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2024 மார்ச் 14 ல் எல் அன்ட் டி நிறுவனம் கட்டுமான முன்பணிகளை துவக்கியது. இந்த போட்டோக்களை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட போது பணிகள் மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியே இன்னும் பெறவில்லை என்ற தகவல் வெளியானது.
தொடர்ந்து, கட்டுமான பணிகளுக்காக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு 2024 பிப்., 27ல் கட்டட அனுமதி கோரி விண்ணப்பம் அனுப்பப்பட்டது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் மே 2 ல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது.
இதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அந்த நிபுணர் குழு கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்த நிலையில், மே 10ல் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், அந்த பகுதி பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் சில நிபந்தனைகளை எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு விதித்துள்ளது.
எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள்
வளாகத்தில் வீணாகும் இயற்கை கழிவுகளை பயோ-காஸ் திட்டத்தின் மூலம் எரிபொருளாக மாற்றி மருத்துவமனை கேண்டீன் சமையலறைக்கு பயன்படுத்த வேண்டும்.
கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத வகையில் ‘ஜீரோ வேஸ்டேஜ்’ ஆக சுத்திகரிக்க வேண்டும்.
மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
வளிமண்டலத்திலிருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் யூனிட்டை இந்தியா அல்லது சர்வதேச தர நிர்ணயத்திற்கு உட்பட்ட வகையில் அமைத்து ஆக்சிஜனை சொந்தமாக தயாரிக்க வேண்டும்.
ஆபரேஷன் தியேட்டர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, நச்சுக்களை வாரம் ஒரு முறை காற்று மாதிரி பரிசோதனைக்கு எடுத்து தரத்தை கண்காணிக்க வேண்டும்.
வாகன பார்க்கிங் பகுதியில் மழை நீர் வடிகால் அமைத்து முறையான வசதிகள் செய்ய வேண்டும்.
சிவகாசி, விருதுநகர் வெடி விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உயர் தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பாலிதீன் பொருட்களை மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது.
எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.