சென்னை: மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், மறைந்த முதல் கம்யூனிஸ்டு தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பணித்தவர் சிங்கார வேலர் என்றும், சுய மரியாதை, சமத்துவம் போன்றவற்றில் முழு ஈடுபாடு கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசியவர், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி விரைந்து துவக்க மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறியவர், மத்திய அரசு ஒப்புதலின்பேரில் நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கி இருப்பதாக கூறினார்.
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 50 மாணவர்களும், ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக்கல்லூரியில் படிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.