மதுரை:

துரை ஆதின மடத்திற்குள்  நித்தியானந்தா பக்தரராக நுழையலாம், ஆதினமாக அல்ல என்று, மதுரை உயர்நீதி மன்ற 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்து உள்ளது.

மதுரை ஆதினத்திற்குள் நுழைய நித்யானந்தா  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றதை எதிர்த்து தொடரப்ட்ட வழக்கில், நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசு பதில் அளித்தது.

ஏற்கனவே  மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர் மடாதிபதியாக பொறுப்பு ஏற்க முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, நித்யானந்தா மடாதிபதி பொறுப்பில் இருப்பது செல்லாது. அந்தப் பதவியை விட்டு விலகியதாக அறிவித்து விட்டு, பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி ஆர். மகாதேவன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதை ஏற்றுக்கொண்டு, தன்னை மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக அறிவித்துக்கொண்டதை திரும்ப பெற்றதாக நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து,  மதுரை ஆதினத்திற்குள் நுழைய தடை விதித்தும் அதன் நிர்வாகத்தில் தலையிட தடை விதித்தும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.

அதைத்தொடர்ந்து, மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்வதாகவும், நித்தியானந்தா தற்போது ஆதினமாக இல்லை என்பதால், அவர் ஒரு பக்தராக ஆதீன மடத்திற்கு செல்லலாம் என்று அனுமதி வழங்கியது.