சென்னை:

சிரியர்கள் பற்றாக்குறையால் தத்தளித்து வந்த சென்னை பல்கலைழக்கத்துக்கு ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தடையால், பல ஆண்டுகளாக பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது தடை விலக்கப்பட்டதைத் தொடர்ந்து,   5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர்களை நியமிக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி, 6 பேராசிரியர்கள், 18 உதவிப் பேராசிரியர்கள் உள்பட  30 ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக, அதை தமிழகஅரசு கையகப்படுத்தியது. அங்கு உபரியாக பணியாற்றி வந்த ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள  மற்ற கல்லூரிகளுக்கு பணி மாற்றம் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுத்தது.

ஆனால், இதற்கு சில பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து மாற்றப்படும் ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பின. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றமும் பணி மாற்றத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, யுஜிசியும், பல்கலைக்கழகங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்க தடை விதித்து தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது. பல்கலைக்கழகங்ளில் ஆசிரியப் பதவிகளில் காலியிடங்கள் இருப்பதால் பல்கலைக்கழகம் யுஜிசியின் மானியம் மற்றும் சிறப்பு உதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, தற்போது ஆசிரியர் பணியிடம் நிரப்புவதற்கான தடை விலக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து கூறிய சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர்,   “பல்கலைக்கழகத்தில் பல துறைகள் மத்திய அரசிடமிருந்து உதவி பெறுகின்றன, ஆனால், இதற்கு குறைந்தபட்ச ஆசிரியர்கள் தேவை என்பதை யுஜிசி விதிகள்  பரிந்துரைக்கின்றன. அதன் காரணமாகத்தான், தற்போது இந்த பதவிகள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படுகின்றன” என்று கூறினார்.