சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய நீதிபதிகள், பழைய விதிகளின்படியே தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில், சுமார் 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர் . இந்த சங்கத்திற்கு இரு ஆண்டு களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது சங்க தலைவராக மோகன கிருஷ்ணன் உள்பட பல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் . இதையடுத்து 2018ம் ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெற இருந்தது.
இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தேர்தலுக்கு தடை விதித்ததுடன், தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய தகுதிகளையும் அறிவித்தது. அதன்படி ஐந்து ஆண்டுகளில் 200 வழக்குகள் நடத்தியவர்கள் தான் தேர்தலில் போட்டிட தகுதியானவர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகளையும் உருவாக்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் உள்பட பலர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, வழக்கறிஞர்கள் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக உத்தரவுடன் ஏற்கனவே உள்ள (பழைய) சங்க சட்ட விதிகள் படி தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டனர்.