சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், குறைந்த அளவு நோய் தொற்று உள்ள .உ.பி.யைவிட குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள் உரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கொரோனாவுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி குறித்தும் வாதங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. ஆனால், மத்தியஅரசு 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்த நிதி நிவாரணப் பணிகளுக்கு போதுமானதாக இருக்காது.
கொரோனா தொற்று குறைவான நோயாளிகளுடன் உத்தரபிரதேசம் 966 கோடியைப் பெறும்போது தமிழ்நாட்டிற்கு 510 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.