சென்னை:
மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மாற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள், உயர்நீதி மன்ற நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தினர்.
75 நீதிபதிகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய உயர்நீதி மன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமணி, 3 நீதிபதிகளை கொண்ட சிறிய உயர்நீதி மன்றமான மேகாலாயா உயர்நீதி மன்றத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது ‘தண்டனை இடமாற்றம்’ என்று கருதப்படுவதால், தனது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதி மன்ற கொலிஜியம் அமைப்புக்கு தஹில்ரமணி கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதி மன்ற தலைமைநீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் தஹில்ரமணி சென்னை உயர்நீதி மன்றத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு மட்டுமே ஆன நிலையில், அவரது பணி மாற்றத்துக்கு வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாளை தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் இன்றே தங்களது போராட்டங்களை தொடங்கி உள்ளனர்.
தலைமைநீதிபதி இடமாற்றம் ‘தண்டனை பரிமாற்றம்’ என்று கருதுவதால், அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும், கொலீஜியம் மிகவும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர், கொலிஜியிம் அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.