மியூசிக் அகாடமியின் வருடாந்திர இசை கச்சேரி சீசனில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ‘சங்கீத கலாநிதி விருது’ வரும் டிசம்பரில் நடைபெற உள்ள 98 வது ஆண்டு விழாவில் பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு அந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு முதல் இந்த விருது மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நினைவாக ‘சங்கீத கலாநிதி எம் எஸ் சுப்புலட்சுமி விருது’ என்ற பெயரில் 1 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் எம் எஸ் சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் இந்த விருதை பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு வழங்குவதாக மியூசிக் அகாடமி அறிவித்ததை எதிர்த்து எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தார்.
2004 ம் ஆண்டு தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005 ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம் எஸ் சுப்புலட்சுமி விருது என்ற பெயரில் வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாடகர்.டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் தனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக கருத்துகளை மலிவான விளம்பரத்துக்காக கூறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடக இசை உலகில் தன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை எப்படிக் கெளரவிக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும்,எம்.எஸ். சுப்புலட்சுமியின் உயிலின்படி, எந்த விதமான விருது வழங்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விருதை டிசம்பரில் நடைபெறும் 98வது ஆண்டு விழாவில், கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் இறை நம்பிக்கை கொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை இறை நம்பிக்கை அற்ற டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவிற்கு பதிலளித்த மியூசிக் அகாடமி, விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும், 2005 ஆம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழ் குழுமம்தான் விருது வழங்குவதாகவும், இதற்கு மறைந்த பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமி குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது.