சென்னை:

டிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை முறைகேடாக விற்பனை செய்து பணத்தை கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்,  நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி உள்பட 4 பேரை கைது செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 29 சென்ட் நிலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேதமங்கலம் என்ற இடத்தில் உள்ளது. இந்த  இடத்தை கடந்த 2006ம் ஆண்டு, அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார்,  பொதுச்செயலாளராக இருந்த ராதாரவி உள்பட நிர்வாகிகள் விற்பனை செய்து கையாடல் செய்ததாக, தற்போதைய  நடிகர் சங்க தலைவர் விஷால் காஞ்சிபுரம்  காவல்துறையில் புகார் கூறியிருந்தார்.

இந்த புகார்  குறித்து காவல்துறை  நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் மூகாந்திரம் இருந்தால் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளலாம் என்று  நீதிமன்றம் கூறியிருந்தது.

இதையடுத்து இந்த நிலம் விற்பனை குறித்து காஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டனர். இதற்கு ஆதாரமாக நடிகர் சங்கத்தை சேர்ந்த நாசர் காஞ்சிபுரம் காவல் கண்காணிப் பாளரை சந்தித்து ஆவனங்களை சமர்ப்பித்தார். இந்த நிலையில்,  நடிகர் சரத்குமார், ராதாரவி, உள்பட நான்கு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் விசாரணையை தொடர்ந்து, நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்பட 4 பேரை கைது செய்ய சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.