சென்னை:
அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவரின் கல்வி சான்றிதழில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
high court
பள்ளி கல்வி துறை, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர்களுக்கு நீதிபதி கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
‘‘கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட 27ம் தேதி ஒரு கார்பரேட் மருத்துவமனையில் அந்த நபர் பெண்ணாக இருந்து ஆணாக மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதோடு மனநலம் மற்றும் சட்ட ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளார். டாக்டரால் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் ஆதாரமாக உள்ளது’’ என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
‘‘அதனால் நான்கு வாரங்களுக்குள் மனுதாரரின் கல்வி சான்றிதழ்களில் அவரது பெயர், பாலினத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலதுறை செயலாளர், சமூக நீதி செயலாளர், சட்ட துறை செயலாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக நீதிபதியே தாமாக முன் வந்து சேர்த்துள்ளார்.
‘‘அதோடு லோக்சபாவில் நிலுவையில் உள்ள 2014ம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவர் உரிமை சட்ட மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என்று தகவல் தெரிவிக்குமாறு உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிப்பது குறித்த செய்திகள் மீடியாக்களில் வெளிவந்துள்ளது. அதனால் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு இதற்கு உரிய சட்டம் கொண்டு வர வேண்டும்’’என்றார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மனுதாரர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.