டில்லி:
சென்னை உயர்நீதி மன்றத்தில் பணியாற்றி வரும் மூத்த நீதிபதியான சுதாகரை மணிப்பூர் மாநில உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளித்து கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் கொடுத்ததும், அவர் மணிப்பூர் மாநில உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார்.
பஞ்சாப், அரியானா, மணிப்பூர், மேகாலயா ஆகிய உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் 12 உயர்நீதி மன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய கொலிஜீயம் அமைப்பு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி தற்போது பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் கிருஷ்ண முராரி, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.யாகூப் மிர் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான சுதாகர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று சரோஜினிதேவி, வழக்கறிஞர் பி.புகழேந்தி ஆகியோரையும் நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான கொலீஜியம் குழு ஆலோசனை நடத்தியது. அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, நீதிபதிகள் நியமனம் குறித்து, உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்த உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் பெயரை மத்திய சட்ட அமைச்சகம் நிராகரித்து குறிப்பிடத்தக்கது.