சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் செயல் திறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நீதித்துறையில் அபூர்வ நிகழ்வாக, தான் விசாரித்த வழக்குகள் தொடர்பான செயல் திறன் அறிக்கையை நீதிபதி சுவாமிநாதன் வெளியிட்டார்.

அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் தான் விசாரித்து பைசல் செய்த வழக்குகளின் விவரத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பா கடந்த மாதம் 27-ம் தேதி சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், கடந்த 2 ஆண்டுகளில் 21,478 வழக்குகளை தான் முடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், 75 வழக்குகளில் விசாரணை முடிந்தும் தீர்ப்பு அளிக்காததற்கு, வழக்கறிஞர்களிடத்திலும், பொதுமக்களிடமும் நீதிபதி சுவாமிநாதன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சூழலை தவிர்க்க, நீதிமன்றத்திலேயே தீர்ப்பை எழுதப்போவதாக தெரிவித்துள்ளார்.

அடைக்கலம் கேட்டு வந்த இலங்கை தமிழ் அகதிகள், இந்திய பிரஜையாக்க வேண்டும் என்று கோர உரிமை உண்டு என்ற தீர்ப்பு, சிறைவாசிகள் தங்கள் மனைவியை தனியே சந்திக்க உரிமை உண்டு போன்ற முக்கிய தீர்ப்புகளை அளித்துள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

தான் வெளியிட்டுள்ள செயல் திறன் அறிக்கை குறித்து, கருத்துகளை தெரிவிக்குமாறு வழக்கறிஞர்களை நீதிபதி சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதிபதி சுவாமிநாதனுக்கு சொந்த ஊர் தஞ்சை. கடந்த 1991-ம் ஆண்டு சென்னை பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

கடந்த 2017 முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்.