சென்னை: இசிஆர் சாலை எனப்படும் சென்னை  கிழக்கு கடற்கரை சாலையில் அமைய உள்ள 4 வழிச்சாலை மேம்பாலத்திற்கான தமிழ்நாடு அரசின்  டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை போட்டுள்ளது.

 போபாலைச் சேர்ந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வரும் 27ம் தேதி வரை டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கான டெண்டர் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு 25ந்தேதி வெளியிடப்பட்ட நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  டென்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை நான்கு வழி உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது மற்றும் சாலையை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தும் திட்டத்திற்கான டெண்டர் (ஒப்பந்தப்புள்ளி) நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த ‘திலீப் பில்ட்கான்’ என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஐதராபாத்தைச் சேர்ந்த ‘கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ (KNR Constructions) நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி. மணிசங்கர் பின்வரும் வாதங்களை முன்வைத்துள்ளார். 1987-ம் ஆண்டு முதல் பல பிரம்மாண்ட பாலங்கள் மற்றும் சாலைத் திட்டங்களை (உதாரணமாக கோவாவின் ஜுவாரி பாலம்) வெற்றிகரமாக முடித்துள்ள திலீப் பில்ட்கான் நிறுவனம், இந்தத் திட்டத்திற்கும் விண்ணப்பித்திருந்தது. ஆனால், கடந்த டிசம்பர் 24, 2025 அன்று எந்தக் காரணமும் கூறாமல் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப விண்ணப்பத்தை நெடுஞ்சாலை ஆணையம் நிராகரித்தது.

வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ‘கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ நிறுவனம், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை விபத்து தொடர்பாக கடந்த மே 2025-ல் மத்திய அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பு கூறியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான காலக்கெடுவை அக்டோபர் 23-லிருந்து நவம்பர் 17 வரை பலமுறை நீட்டித்தது, தகுதியற்ற ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்படவே என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் அந்த நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, இந்தத் திட்டத்தின் டெண்டர் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஜனவரி 27-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது குறித்து அரசுத் தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்றத் தடை காரணமாக, ஜனவரி 27 வரை ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யவோ அல்லது பணிகளைத் தொடங்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]