சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான லட்சுமி நாராயணன், வடமலை ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் அறிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. ஆனால், இவை ஒருபோதும் நிறைவு பெற்றது கிடையாது. தற்போதைய (2025 பிப்ரவரி) நிலவரப்படி 66 நீதிபதிகளே பணியில் உள்ளனர். மேலும், 9 நீதிபதிகளின் இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் 10 நீதிபதிகள் ஓய்வு பெறவுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான லட்சுமி நாராயணன், வடமலை ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம், கடந்த பிப்ரவரி 5ந்தேதி அன்று மத்தியஅரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதை ஏற்ற மத்திய சட்ட அமைச்சகம், அதை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதை ஆய்வு செய்த குடியரசு தலைவர் முர்பு, இதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி, கூடுதல் நீதிபதிகளான லட்சுமி நாராயணன், வடமலை ஆகியோர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகள்காக பதவியேற்று கொண்டனர். அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த ஆண்டு (2025) ஓய்வுபெற்ற மற்றும் பெறும் நீதிபதிகள் விவரம்:
நீதிபதி என்.சேஷசாயி ஜனவரி 8ம் தேதி ஓய்வு பெற்றார்
நீதிபதி ஹேமலதா மே 1ம் தேதியும், எஸ்.எஸ்.சுந்தர் மே 3ம் தேதியும், நீதிபதி பவானி சுப்பராயன் மே 5ம் தேதியும் ஓய்வுபெறுகின்றனர். மேலும்,
நீதிபதி சிவஞானம் ஜூன் 1ம் தேதி, நீதிபதி இளங்கோவன் ஜூன் 5ம் தேதி , நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஜூன் 9ம் தேதியும், நீதிபதி சாத்திகுமார் சுகுமார குரூப் ஜூலை 8ம் தேதியும், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் ஜூலை 25ம் தேதியும், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் செப்டம்பர் 28ம் தேதி ஆகியோர் ஓய்வு பெறுகிறார்கள்.
இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரைவில் புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.